இல்லம்
[ HOME ]

தமிழின் வளர்ச்சியே தமிழனின் வளர்ச்சி. அதற்கொப்ப தமிழனின் வளர்ச்சியும் தமிழின் வளர்ச்சிக்கு வித்தாக வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பெறும் அறிவும் தமிழனுக்குள் ஏற்றப்பட வேண்டும்; ஒவ்வொரு தமிழனும் பெறும் அறிவும் அப்படியே தமிழுக்கும் கடத்தப்பட வேண்டும். தமிழனிடமிருந்து மொழிக்குச் செய்யப்படும் அறிவுக் கடத்தல் புதுச் சொல்லாக்கங்கள் மூலம் செயற்படுத்தப்பட வேண்டும்.
இந்நேரம் நம்முள் பல வினாக்கள் எழுகின்றன.
புதிய தமிழ்ச் சொற்களை ஆக்குவோர் யாவர்?
ஆக்கப்படும் புதுச் சொற்களுக்கு ஒப்புதல் அளிப்பவர் யாவர்?
ஒப்பளிக்கப்பட்ட சொற்களைப் புழங்க விடுவோர் யாவர்?
புழக்கத்துக்கு வரும் சொற்களைப் பயனாக்குவோர் யாவர்?
அனைத்து வினாக்களுக்கும் பொதுவான ஒரே விடை தமிழர் என்பது தான். ஆயினும் எத்தகு தமிழர் என்பதே அனைத்திலும் முக்கியமான வினாவாகும்.
மேற்கண்ட வினாக்களை மாற்றி அமைத்துப் பார்ப்போம்
புதிய தமிழ்ச் சொற்களை யார் ஆக்க வேண்டும்?
ஆக்கப்படும் புதுச் சொற்களுக்கு யார் ஒப்புதல் அளிக்க வேண்டும்?
ஒப்பளிக்கப்பட்ட சொற்களை யார் புழங்க விட வேண்டும்?
புழக்கத்துக்கு வரும் சொற்களை யார் பயனாக்க வேண்டும்?
தக்கார் ஆக்கும் புத்தமிழ்ச் சொல்லே தகைமை வாய்ந்த சொல்லாகும். தமிழ் நாட்டரசே புத்தமிழ்ச் சங்கமொன்றை நிறுவ வேண்டியது தற்போதைய தேவையாகும். அச்சங்கத்தில் தக்காரே புத்தமிழ்ச் சொற்களை யாக்கும் பொறுப்பு முதல் பயனாக்கும் பொறுப்பு வரை யேற்று வழி காட்ட வேண்டும். பொதுத் தமிழ் மக்கள் பின்தொடர்வர்.
இக்காலத்தில் பல்வேறு இயல்களில் கலைச்சொற்கள் ஆக்கப்பட்டு வருகின்றன.. ஒரு கலைச் சொல்லைப் படைப்பவர் தொடர்புடைய இயலில் அறிஞராக இருப்பார். அவர் தமிழில் ஏற்கனவே வழங்கி வரும் சொற்களை இணைத்து புதுச் சொல்லாக்கம் செய்வதால் அவை பெரும்பாலும் கூட்டுச் சொற்களாகவே அமைகின்றன; மட்டுமன்றி பெரும்பாலான நேரங்களில் மொழி மாற்றமாகவே அமைகின்றன. Applied Science என்ற தொடர்ச்சொல்லுக்கு வெவ்வேறு இணையதளங்களில் பயன்பாட்டறிவியல், பயனுறு அறிவியல், பயன்முறை அறிவியல் மற்றும் செயல்முறை யறிவியல் என்றவாறு சொல்லாக்கம் நிகழ்ந்துள்ளது. இவற்றுள் எச்சொற்றொடரை நாம் எடுத்தாள்வது?
இன்னும் சொல்லப் போனால் தாம் புதுச் சொல்லாக்கத்துக்காகப் பயன்படுத்தும் தனிச் சொற்கள் தூய தமிழ்ச்சொற்கள் என்ற நம்பிக்கையில் அவ்வறிஞர் செயல்படுகிறார். ஆயினும் இன்னும் தமிழில் வழங்கி வரும் பல சொற்கள் பிற மொழிச் சொற்களாக இருப்பதால் ஒருவேளை அவை பிற மொழிச் சொற்கள் என்ற புரிதல் அவருக்கு இல்லாமல் இருந்தால் அவருடைய நம்பிக்கை மெய்யாக அமையாமல் போகும். ஆகவே புத்தமிழ்ச் சொற்கள் பல நற்றமிழ்ச் சொற்களாக, தூய தமிழ்ச் சொற்களாக அமையவியலாமற் போய்விடுவதை நாம் கண்ணுறுமாறு ஆகி விடுகிறது. அது மட்டுமன்றி, சில நேரங்களில் புதுச் சொல்லாக்கம் நகைப்புக்குரியதாக அமைந்து விடுவதும் கண்கூடு தான்.
தமிழ் மொழியின் வளர்ச்சி ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதை எம்மைப் போன்ற தமிழர்களால் ஏற்கவே முடியவில்லை. சரி, இதுவே இன்றைய நிலை மாற்ற முடியாத நிலை, விடுவோம். ஆனால் அதை நாம் சரியாகச் செய்ய வேண்டும். நாம் கவனித்த வரையில் ஆங்கிலத்தில் வழக்கிலுள்ள பெயர்ச் சொற்களுக்கோ அல்லது தொடர்ச் சொற்களுக்கோ தமிழில் மொழிபெயர்ப்பு செய்து விட்டு, கலைச் சொற்கள் என அவற்றை அழைக்கிறோம்.
Parallel என்னும் ஆங்கிலச் சொல் பெயர்ச் சொல், பெயரடை, வினைச் சொல் மற்றும் வினையடை ஆகிய வடிவங்களை யுடையது. இச்சொல் எவ்வெவ் விடங்களில் எவ்வெவ் விதங்களி லெல்லாம் ஆளப்படுகிறது என்று காண்போம்.
Adjective (Position): If two or more lines, streets, etc, are parallel, the distance between them is the same all along their length.
Adjective (Position, Geometry): (Of two or more straight lines) being the same distance apart along all their length
Adjective (Position, Earth Science): One of the imaginary latitude lines around the earth that are parallel to the equator
Adjective (Similar): Used to describe an event or situation that happens at the same time as and/or similar to another one
Adjective (Computing): Sending through several bits (=units) of information at a time using a link with several channels (=wires or connections)
Adjective (Economics, Commerce): Used to describe products that are bought in one country in an unofficial way and then sold more cheaply than usual in a different country
Adjective (IT): Involving two or more computer processes happening at one time
Noun (Similarity): Something very similar to something else, or a similarity between two things. If something has no parallel or is without parallel, there is nothing similar to it or of the same high quality as it
Noun (Position): A line parallel to another line is one that is always at the same distance from the other line
Noun (Electronics): If two or more parts of an electrical system are in parallel, they are arranged in a way that means they both receive the same amount of electricity
Verb: To happen at the same time as something else, or be similar or equal to something else
Adverb: In a position that is always the same distance from something else
இணையதளப் பக்கங்களில் இச்சொல்லுக்கு சமாந்தரம், இணை, ஒரு போகு ஆகியன தமிழ்ச் சொற்களாகத் தரப்பட்டுள்ளன. இச் சொற்களின் உருவாக்கம் எங்ஙனம் நிகழ்ந்தது, யார் நிகழ்த்தியது, யார் ஒப்பியது, எவ்விடங்களில் எச்சொல் எவ்விதம் பயனுறும் என்பனவும் தெரிந்து கொள்ள வியன்றால் நன்றாக விருக்கும்.
எல்லாவிதமான சிக்கலும் சிக்கலுக்கான தீர்வும் தமிழ்க் கல்வியில் பொதிந்திருப்பதாகவே நமக்கு எண்ணத் தோன்றுகிறது. வேர்ச்சொல் வழிக்கல்வி யொன்றே தமிழில் தற்போது நிலவி வரும் சிக்கல்களுக்கான தீர்வாக அமையும். ஒரு சொல் தமிழ்ச் சொல் தானா என்பதைத் தெரிந்து அறிவதற்கும் பிற மொழிச் சொல்லாயின் அதற்கு இணையான தமிழ்ச் சொல்லை யாக்கவும் வேர்ச்சொல் வழிக்கல்வி யொன்றே உற்ற நண்பனா யுதவும். இன்னும், புதுச் சொல்லாக்கத்தில் நிலவி வரும் குறைகளுக்கும் இதுவே தீர்வாக அமையும்.
வாயால் எழுப்பப் படும் ஒலிக் குறிப்புகள் மூலம் தங்களுக்குள் தொடர்பு கொண்ட மனிதன் உள்ளிட்ட விலங்குகளும் பறவைகளும் மற்ற உயிரினங்களும் இயல்பாகப் பயன்படுத்தியவை ஊ, ஆ, ஈ, கா, மா, கூ போன்ற நெடில் ஒலிக் குறிப்புகளே. இன்றும் அதனை நாம் கேட்டுணரலாம். மனிதனைப் பொறுத்த வரை ஊ என்ற ஒலிக் குறிப்பே முதன்மையாகப் பயன்படுத்தப் பட்டிருக்கும். பின்னர் அபாயத்தை அறிவிப்பது போன்ற சூழலுக்குட்பட்டு உ உ உ .. போன்ற குறில் ஒலித் தொடர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். மனிதனை விலக்கிப் பார்த்தோமானால் இத்தகு நெடில் மற்றும் குறில் ஒலிக் குறிப்புகளே இன்றளவும் பெரும்பாலான உயிர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் பார்க்க முடிகிறது.
மனிதனின் அறிவு வளர்ச்சியில் மொழியும், மொழி வளர்ச்சியில் அவனது உற்று நோக்கும் பண்பும் தலையாய பங்கு வகிக்கின்றன. அவனது வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் கதிரவன், தாவரங்கள், வேட்டை விலங்குகள் போன்றவற்றிடம் பொதுவான சில குணங்களைக் காண்கிறான். இம்மூன்றும்
-
முன்னிருத்தல் -
முளைத்தல் -
தோன்றுதல் -
மேலெழும்புதல்
-
உயர்தல் -
மேற்செல்லுதல் -
பெரிதாதல் -
வலிதாதல்
-
வளைதல் -
சுற்றுதல் -
காய்தல் -
எரிதல்
-
சிறிதாதல் -
கீழிறங்குதல் -
உள்ளடங்குதல் -
கீழே தங்குதல்
போன்ற பல்வேறு குணங்களையும் செயல்களையும் பொதுவாகக் கொண்டிருக்கக் காண்கிறான்.
தானும் பிற வேட்டை விலங்குகளும் வேட்டையின் போது
-
குத்துதல் -
துளைத்தல் -
ஊடுருவுதல்
-
ஊடுருவி வெளிப்படுதல் -
அழித்தல் -
கெடுத்தல்
போன்றவற்றை நிகழ்த்துவதைக் கண்டுணர்கிறான். தமிழின் முதன்மை வேர்ச்சொல் ‘உல்’ இப்போதே பிறக்கிறது. ‘ஊ’ விலிருந்து தோன்றி ‘உ’ வுக்கு உயர்ந்து ‘உல்’ லுக்குள் மேற்செல்கிறான்.
மொழிகளின் தாய் தமிழாயின் தமிழ்ச் சொற்களின் தாய் ‘உல்’லாகும்.
‘உல்’லே
-
‘ஒல்’லுக்கும் -
‘அல்’லுக்கும் -
‘எல்’லுக்கும் -
‘இல்’லுக்கும்
வேராகும்
-
‘உர்’ருக்கும் -
‘உள்’ளுக்கும் -
‘உன்’னுக்கும் -
‘உரு’வுக்கும் -
‘உறு’வுக்கும் -
‘உல’காகும்
ஆனால் இவ்வறிவு பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ தமிழனுக்குப் புகட்டப்படுகிறதா வென்றால் இல்லை யென்பதே பதில். இவ்வறிவு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி கொடுத்தது. இந்துவுக்கு வேதமும் கீதையும், கிறித்தவருக்கு பைபிளும் மற்றும் இசுலாமியருக்கு குரானும் போன்று தமிழருக்கு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி யாகும்.
இற்றைத் தமிழனின் முதன்மைத் தேவை வேர்ச்சொல் வழியிலானதொரு தமிழ்க் கல்வியாகும். அதுவே அவனது வளர்ச்சிக்கும் அவனது தாய்த் தமிழின் வளர்ச்சிக்கும் வழிகோலும். அதற்கு அடிப்படையாக விளங்குவது நாம் இனி தயாரிக்கப் போகும் செந்தமிழ் வேர்ச்சொல் முதலி யாகும். ஆயினும் அது மட்டுமே போதாது தான். ஏனெனில் அவ்வேர்ச்சொல் முதலியில் ‘வெற்றிடங்கள்’ நிறைந்திருக்கும். அவற்றை நிரப்பிட நமக்குத் தேவைப்படுவது வேர்ச்சொல் வழியிலான புதுச் சொல்லாக்கமாகும்.
அவ்வாறாயின், அவ்வாறாக்கப் படும் சொற்கள் தேவையின் அடிப்படையில் அமைதலாகா. இப்போதே அச்சொற்களை நாம் ஆக்கி வைத்துக் கொள்ளுதலே யறிவு. ஆக, நம் உடனடித் தேவை ‘செந்தமிழ்ச் சொல் வைப்பகம்’ ஆகும்.
நாம் ‘உய்’ என்றதொரு வேர்ச்சொல்லை யெடுத்துக் கொள்வோம். உய் யுடன் தல் சேர்ந்து உய்தல் ஆகி, பின்னர் உயல் எனத் திரிபடைகிறது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உயல் என்ற பெயர்ச்சொல்லுக்கு வாழ்தல், தப்புதல், மற்றும் உளதாதல் என்று பொருளுரைக்கின்றது. மேலும், உயலு(தல்) என்ற செ. கு. வினைச்சொல்லுக்கு அசைதல், செல்லுதல் மற்றும் நடத்தல் என்றும் பொருளுரைக்கின்றது. அடுத்து வரும் சொல் உயவர் ஆகும். இங்கே உயலுக்கும் உயவருக்கும் இடையே பல வெற்றிடங்களை நம்மால் உணர முடிகிறது. பின்வரும் பட்டியல் அவ் வெற்றிடங்களை நிரப்பத் தகுந்த ஒரு சில ‘வெட்டிச் சொற்களை’ எடுத்துக் காட்டுகிறது.
| உயலா | உயலி | உயலே | உயலை | உயலோ |
| உயலண் | உயலம் | உயலர் | உயலல் | உயலன் |
| உயலடி | உயலணி | உயலரி | உயலளி | உயலனி |
| உயலுகை | உயலுடை | உயலுணை | உயலுமை | உயலுரை |
இவ்வாறே ‘வெட்டி வேர்ச் சொற்கள்’ கூட வெற்றிடங்களை நிரப்பும் வண்ணம் உருவாக்கப் படலாம். இவ்வாறு ஆக்கப்படும் ஆயிரக் கணக்கான தனிச் சொற்கள் ஏற்கனவே வழக்கிலிருக்கும் சொற்களுடன் சேர்ந்து இலக்கக் கணக்கில் புதுச் சொற்களை நமக்கு ஆக்கித் தரும். பல் துறை அறிஞர்களும் தத்தம் தேவைக்கேற்றார் போல தூய நற்றமிழ்ச் சொற்களை உருவாக்கி மகிழலாம்.
இவ்வாறான எண்ண வோட்டத்தின் அடிப்படையில் ஆயிரக் கணக்கிலான தனிச் சொற்கள் உருவாக்கப் பட்டு, பொருளேற்று உயிர் பெற வேண்டி, பல் துறை அறிவு சால் பெரியோருக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியை அடிப்படையாகக் கொண்டு நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் செந்தமிழ் வேர்ச்சொல் முதலி முழுமையுற்ற பின்னர் துறை சார்ந்த கலைச்சொல்லாக்கம் எளிமையாகும் என்பது எமது நம்பிக்கை.
இந்நம்பிக்கை மற்றும் நாம் ஒரு கணித ஆசிரியர் என்ற மனத்துணிவு இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டு கணிதச் சொற்களஞ்சியம் ஆக்கும் பணியில் பங்கெடுக்க வேண்டும் என்பது அடுத்த திட்டம்.